search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடும் போக்குவரத்து"

    ஈரோடு மேட்டூர் ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் புதிய மேம்பாலம் கட்டப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் முக்கிய சாலைகளில் ஒன்றாக மேட்டூர் ரோடு திகழ்கிறது. அந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. திருப்பூர், கோவை, ஊட்டி, பழனி, மதுரை, கரூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து வரும் பஸ்கள் மேட்டூர் ரோடு வழியாக சென்று பஸ் நிலையத்துக்குள் சென்று வந்தன. ஆனால் அங்கு போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டிய பஸ்கள் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வாசுகி வீதி வழியாக திருப்பி விடப்பட்டன.

    பஸ்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டாலும், மேட்டூர் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. சுவஸ்திக் கார்னர் சிக்னலில் இருந்து முனிசிபல் காலனி வரை வழிநெடுகிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மேலும், பகலில் மேட்டூர் ரோடு வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் ஊர்ந்தபடிதான் செல்ல வேண்டியுள்ளது.

    இந்த நிலையில் வாசுகிவீதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடந்து வருவதால் அனைத்து பஸ்களும் மேட்டூர் ரோடு வழியாக செல்கிறது. இதனால் நேற்று முன்தினம் மேட்டூர் ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். அங்கு போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய மேம்பாலம் கட்டி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, “ஈரோட்டில் உள்ள முக்கிய சாலைகளில் மேட்டூர் ரோட்டில்தான் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அங்கு பாலம் கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. பிரப்ரோடு, ஈ.வி.என்.ரோடு, பெருந்துறை ரோட்டை இணைத்து புதிய மேம்பாலம் கட்டப்படும்போதே மேட்டூர் ரோட்டிலும் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது மேம்பாலம் கட்டுவதற்கான மண் பரிசோதனையும் செய்யப்பட்டது. ஆனால் மேம்பாலம் கட்டப்படவில்லை. எனவே புதிய மேம்பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றனர்.
    ×